குமரி அருகே இரும்புக்கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை!

 
fire

கன்னியாகுமரி அருகே தொழில் நஷ்டமடைந்ததால் இரும்புக்கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அடுத்துள்ள நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50). இவர் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கரோலின் மலர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த நிலையில், சுரேஷ்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் மனஉளைச்சலுடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார், அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

kumari

இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். இதனை அடுத்து, சுரேஷ்குமார் சிகிச்சைக்காக குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குலசேகரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து சுரேஷ்குமார் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.