கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ரத்து... அதிகாரிகளை முற்றுகையிட்ட விண்ணப்பதாரர்கள்!

 
erode

ஈரோட்டில் முன்னறிவிப்பு இன்றி கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மண்டல கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 19 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு 4,125 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு கடந்த 26ஆம் தேதி முதல் ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணலின்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு, பின்னர் சைக்கிள் ஓட்டவும், கால்நடைகளை கையாளுவது குறித்தும் செய்து காண்பித்தனர்.

4 நாட்கள் நடைபெறும் நேர்காணலுக்கு நாள்தோறும், ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட்டனர்.இந்த நிலையில், புதன்கிழமை மாலை திடீரென நிர்வாக காரணத்தால் அடுத்த 2 நாள்கள் நடைபெற உள்ள நேர்காணல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து, நேர்காணல் நடைபெறும் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனை  தெரியாமல் நேற்று காலை வழக்கம்போல் நேர்காணலுக்கு 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

veterinary

அப்போது, நேர்காணல் ரத்தானதை அறிந்து ஆத்திரமடைந்த விண்ணப்பதாரர்கள், கால்நடை மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலின் பேரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கால்நடை மருத்துவமனை முன்பு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர். அப்போது, விண்ணப்பதாரர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நேர்காணல் ரத்து செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்றும், இது தங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அப்போது, விண்ணப்பதாரர்களிடம் பேசிய கால்நடை பராமரிப்பு துறை மண்டல துணை இயக்குனர் பழனிவேல், நிர்வாக காரணங்களால் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கண்டிப்பாக மறு அறிவிப்பு வரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அனைவரது செல்போன் எண்ணும் உள்ளதால், கண்டிப்பாக அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை ஏற்று, விண்ணப்பதாரர்கள் கலைந்து சென்றனர்.