தருமபுரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டம் துவக்கம்: 4,170 உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது!

 
dharmapuri

தருமபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் 4,170 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை, ஆட்சியர் சாந்தி துவங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தருமபுரி அரசு கலைக்கல்லுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். எம்பி செந்தில்குமார், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

dharmapuri

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பயன்பெறுகின்ற 4,170 உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி வழங்கும் விதமாக இவ்விழாவில் 625 மாணவிகளுக்கு ஏடிஎம் அட்டையை வழங்கினார். மற்ற மாணவிகளுக்கு அஞ்சல் மூலமாக ரூ.1,000 நிதி உதவி பெறுவதற்கான ஏடிஎம் அட்டைகள் அனுப்பப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் சாந்தி, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உள்ள மாதம் ரூ.1,000 நிதி உதவியை உயர் கல்விக்கு உத்தரவாதமாக நீங்கள் பயன்படுத்திக்கொண்டு உயர்ந்த இடத்தை அனைவரும் எட்ட வேண்டும் எனவும், உயர்கல்வி என்பதை உங்கள் இலக்காக கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.