திருவாரூரில் புதுமைப் பெண் திட்டம் துவக்கம்... 588 கல்லூரி மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கிய ஆட்சியர் காயத்ரி!

 
tvr

திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் 588 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெறும் வகையில் ஏடிஎம் கார்டுகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி வழங்கினார்.

தமிழ முதல்வர் ஸ்டாலின் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் புதுமை பெண் திட்டம் வாயிலாக கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். இதனையொட்டி, திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கலந்துகொண்டு, 588 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெறும் வகையில் ஏடிஎம் கார்டு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கையேட்டினை வழங்கினார்.

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் காயத்ரி பேசியதாவது, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் புதுமை பெண் திட்டத்தின் வாயிலாக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு படித்து மேற்படிப்பில் சேறும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு / பட்டயப்படிப்பு  / பட்டப்படிப்பு  / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
tvr

இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகளாக  மாணவிகள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். தனியார் பள்ளியில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவியர் இச்சட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

மாணவிகள் 8 (அல்லது) 10 (அல்லது) 12ஆம் வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேறும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். பட்டயம் (டிப்ளமோ, ஐடிஐ, டி.டெட்) இளங்களைப்பட்டம் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம், பிபிஏ, பிசிஏ மற்றும் அனைத்து கலை அறிவியல் படிப்புகள்), தொழிற் சார்ந்த படிப்பு (பி.இ., பி.டெக்., எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி( வேளாண்மை), பி.விஸ்வல் கம்யூனிகேஷன், உள்ளிட்ட அனைத்து படிப்புகள்) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (நர்சிங், பார்மசி, மெடிக்கல் லேப்) போன்றவைகளுக்கும் பொருந்தும். மேலும், தொலைதுர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்ததாது.

இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். இதுநிலை படிப்பு மாணவியர்கள் பயன்பெற இயலாது. திட்டம் குறித்த தெளிவுரைகள்  / கூடுதல் விவரங்களுக்கு  கட்டணமில்லா தொலைபேசி எண் - 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேறும் மாணவியர்களும், இளங்கலை  / தொழிற்கல்வி  / மருத்துவக் கல்வியில் 2ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள இணையதளம்  https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.