சொத்து தகராறில் ஐ.டி. நிறுவன ஊழியர் அடித்துக்கொலை... திண்டுக்கல் அருகே பயங்கரம்!

 
murder

திண்டுக்கல் அருகே சொத்து தகராறில் ஐ.டி. நிறுவன ஊழியரை சம்பட்டியால் அடித்துக்கொன்ற உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயி. இவரது மகன் ராஜபாண்டி(32). இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பாண்டியனுக்கும், அவரது சகோதரி அய்யம்மாளுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும், அய்யம்மாளின் மகனான சக்திவேல் என்பவர் சொத்தை தனக்கு பிரித்து தரக்கோரி, பாண்டியன் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று ராஜபாண்டி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள், சொத்து விவகாரம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

police

அப்போது, ஆத்திரமடைந்த சக்திவேல் தரப்பினர், ராஜபாண்டியை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், சம்பட்டியால் அவரது தலையில் பலமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.