கோவிலுக்கு அணிந்த மாலையை கணவர் கழற்றியதால் மனைவி தற்கொலை... திருப்பத்தூரில் சோகம்!

 
suicide

தன்னிடம் தெரிவிக்காமல் கணவர் கோவிலுக்கு அணிந்த மாலையை கழற்றியதால் வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர் ரமேஷ் (36). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ரமேஷ், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு மாலை அணிந்து பாத யாத்திரையாக கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருவண்ணாமலைக்கு மாலை அணிந்துள்ளார். இதனிடையே சில காரணங்களால் அவர் மாலையை கழற்றியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கவிதா, தன்னிடம் தெரிவிக்காமல் மாலையை கழற்றியது ஏன்? என கணவர் ரமேஷிடம் கேட்டுள்ளார். 

tirupattur

அப்போது, கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த கவிதா, தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.