மதுரையில் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை கொள்ளை!

 
robbery

மதுரையில் கல்லூரி பேராசிரியர் தம்பதியினர் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியா பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் ஜெபராஜ். இவர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை பிராங்கிளின் ஜெபராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். பணி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிராங்கிளின் ஜெபராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதன் உள்ளே இருந்த 56 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

madurai

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.