கோவையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

 
cbe

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் நேற்று ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அந்த அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியரகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

jactto geo

மேலும், இடைநிலை ஆசிரியர்கள், முதல் நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையவும், தொகுப்பூதியம் சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அத்துடன், சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தவும், முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.