கோவையில் துணிவு படம் வெளியான திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ரகளை - போலீசார் தடியடி!

 
cbe

கோவை அர்ச்சனா திரையரங்கில் துணிவு படத்தின் முதல் காட்சியை காண வந்த அஜித் ரசிகர்கள் திரையரங்கில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதால், போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.  

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று வெளியானது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.  அதன் ஒரு பகுதியாக, கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா தியேட்டரில் நள்ளிரவு 1 மணி அளவில் துணிவு படம் வெளியானது. அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது, திடீரென சிலர் திரையங்கிற்குள் அத்துமீறி நுழைந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

cbe

மேலும், அங்கிருந்த கண்ணடி கதவுகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரசிகர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது, சிலர் போலீசாரின் மீது பட்டாசுகளை கொளுத்தி வீசினர். இதனை அடுத்து, அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.