ஆரணியில் அடுத்தடுத்து 5 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை... போலீசார் விசாரணை!

 
arani

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியலை கடந்த 31ஆம் தேதி நள்ளிரவு மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருடிச்சென்றனர். இதேபோல், அன்றை தினம் பையூர் எம்ஜிஆர் நகர் விநாயகர் கோவில், வேலப்பாடி சிவசக்தி நகரில் உள்ள மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயில்களிலும், கரிகந்தாங்கலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருட்டு போனது. புத்தாண்டு தினத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து புகாரின் பேரில் ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

arani

இந்த நிலையில், கொள்ளை நடைபெற்ற கோவில் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஆரணி மாரியம்மன் கோவிலுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்மநபர்கள், கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு தப்பிச்செல்லும்  காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.