"கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை"... காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை!

 
kanchipuram

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மீறி மனிதர்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி எச்சரித்துள்ளார். . 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவன உணவகம், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் கழிவுநீர் உறிஞ்சி ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

kanchi

இந்த கூட்டத்தில் ஆட்சியர் ஆர்த்தி பேசியதாவது ;- கழிவுநீர் தொட்டியினை சுத்தம் செய்யும் பணிக்கு இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மனிதர்களை உள்ளே இறக்கி சுத்தம் செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரத்தை இயக்குபவர்கள் தகுந்த பாதுகாப்பு உடைகளை பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தீயணைப்புத்துறை அலுவலரிடமிருந்து தடையின்மை சான்று பெறப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்திட வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களின் பார்வைக்கு விளம்பர பதாகைகள் வைத்தும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.