கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பும்போது துன்புறுத்தினால் நடவடிக்கை - அரியலூர் ஆட்சியர்!

 
collector ariyalur

அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பும்போது துன்புறுத்தாமல் பராமரிக்க வேண்டுமெனவும், அதனை மீறினால் விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில், பல கிராமங்களில் கால்நடை வளர்க்கும் விவசாய பெருமக்கள் தங்களது பசுக்கள், எருமைகள் மற்றும் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பும் பட்சத்தில் அவர்கள் முன்காலில் கயிறுகட்டி அதனை கழுத்துடன் இணைத்து அனுப்பிவிடுகிறார்கள். இதனால் கால்நடைகள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகின்றன. மேலும், அவ்வாறு கட்டப்பட்ட கால்நடைகள் வேகமாக செல்லவும், திரும்பவும் முடியாமல் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும்  வாகன சேதங்களை ஏற்படுத்துகின்றன.

cattle market

பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட பிராணிகள் வதை தடுப்பு சட்டம் 1960 பிரிவு 3ன்படி - 1. பிராணிகள் பசி, பிணியின்றி தேவையற்ற துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பது ஓவ்வொரு குடிமகனின் கடமையாகும். இதனை மீறி தெருக்களில் கால்நடைகளை திரிய அனுமதிக்கும் உரிமையாளருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும். 2. கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும்போது குறைந்தபட்சம் 2 சதுர மீட்டர் இடவசதி மற்றும் குடிநீர் வழங்க வேண்டும்.

எனவே அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்க்கும் விவசாய பெருமக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பும்போது துன்புறுத்தாமல் பராமரிக்க வேண்டுமெனவும், அதனை மீறினால் விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.