"அதிகார தோரணையுடன் பேசிய திமுக கவுன்சிலரின் கணவர்"... கோவை மாநகராட்சி ஆணையரிடம் சுகாதார ஊழியர்கள் புகார்!

 
cbe

கோவை மாநகராட்சி 61-வது வார்டு சுகாதார அலுவலகத்தில், திமுக கவுன்சிலரின் கணவர் அதிகார தோரணையில் ஊழியர்களிடம் நடந்து கொண்ட சம்பவம் குறித்த வீடியே காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியின் 61-வது வார்டில் திமுகவை சேர்ந்த ஆதிமகேஸ்வரி என்பவர் கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் திராவிட மணி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணி அளவில் 61-வது வார்டுக்கு உட்பட்ட சுகாதார அலுவலகத்தில், சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு, அதிகார தோரணையில் சுகாதார பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ததாகவும், சுகாதார பணியாளர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

cbe commissioner

மேலும், சுகாதார பணியாளர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை தானே முடிவு செய்வேன் என்றும், தான் சொல்லும் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் கூறியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை அங்கிருந்த ஓருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எந்த வித பொறுப்பிலும் இல்லாத, திமுக பெண் கவுன்சிலர் கணவரின் இந்த அத்துமீறிய செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர், இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையரிடமும் முறையீடு செய்துள்ளனர்.  மேலும், இந்த விவகாரத்தில் மாநகாட்சி ஆணையர் தலையிட்டு, எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.