மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு... திருச்சியில் சோகம்!

 
couple dead

திருச்சியில் மனைவி இறந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியில் கணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பாலக்கரை ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(90). இவரது மனைவி சம்பூரணத்தம்மாள். இத்தம்பதிக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். மேலும், கிருஷ்ணன், மணச்சநல்லூரில் உள்ள தனது மூத்த மகன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் காட்டூரில் உள்ள மற்றொரு மகனின் வீட்டிலும் வசித்து வந்தனர்.

dead

சம்பூரணத்தம்மாளுக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மணச்சநல்லுரில் உள்ள அவரது கணவர் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த கிருஷ்ணன் சம்பூரணத்தம்மாள் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் கதறி அழுதார். இந்த நிலையில், காலை 6.30 மணி அளவில் அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து, மணச்சநல்லுரில் உள்ள அவர்களது வீட்டில் கிருஷ்ணன் மற்றும் சம்பூரணத்தம்மாளின் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவர்களது உடல்களுக்கு உறவினர்களும், அந்த பகுதி பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இறப்பிலும் தம்பியினர் இணை பிரியாமல் இருந்து அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.