தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

 
tanjore

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மழையின்போது மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள வேம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் மதன் (24). ஊர்க்காவல் படையில் பணிபுரிந்த இவர், அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் நிலையத்தில் தற்காலிக ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது அய்யம்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்ததால், வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்குள்ள கட்டிடத்தின் அருகில் நின்றுள்ளார். மழை நீண்ட நேரமாக நிற்காததால் தனது வாகனத்தில் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த மதன் வாகனத்தில் ஏறச்சென்றுள்ளார்.

ayyampettai

அப்போது, அருகில் இருந்த உயர் கோபுரம் மின் விளக்கில் மின்கசிவு ஏற்பட்டு, மதன் மீது மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் அய்யம்பேட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.