இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம்... நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!

 
nellai

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாநகரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 393 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 87 வழக்கில் 91 நபர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதோடு, அதில் 54 நபர்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாததால் மரணம் அடைந்துள்ளனர். ஆகையால் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும், வாகனத்தை ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து உயிர் சேதத்தை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் ரஜேந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.

puducherry helmet

மேலும், சனிக்கிழமை முதல் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட திருநெல்வேலி மாநகரம் பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். எனவே இருசக்கர வாகனம் ஓட்டும் மற்றும் பின்புறத்தில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.