ஈரோட்டில் பாஜக - இந்து முன்னணி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ; வழிபாட்டு தலங்கள், தலைவர்கள் சிலைகளும் கண்காணிப்பு!

 
erode bjp

கோவையில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பத்தை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக, இந்து முன்னணி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

கோவை மாநகரில் பாஜக அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து, 400  சிறப்பு காவல் படையினர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைவர் சிலைகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

policd

இதன்படி, ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், காளை மாட்டு சிலை பகுதி, ஈரோடு ஜிஎச் ரவுண்டானா, மேட்டூர் ரோடு, பேருந்து நிலையம், வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அண்ணா - பெரியார் நினைவகம், பெரிய மாரியம்மன், ஈஸ்வரன் கோவில், மசூதிகள் ஆலயங்களில் மற்றும் காய்கறி மார்க்கெட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், இந்து முன்னணி அலுவலகம், பச்சப்பாளையம் சாலையில் உள்ள பாஜக அலுவலகம், கொங்கம்பாளையத்தில் உள்ள பாஜக தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் வீடு, இந்து முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம், மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் ஆகியோர் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு படப்பட்டுள்ளது.

இதேபோல் கோபி பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் சிலை, மசூதிகள், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், கோபி பச்சைமலை பவளமலை கோவில்களில் மற்றும் பாஜக, இந்த முன்னணி அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சத்தியமங்கலத்தில் மணிக்கூண்டு பகுதி பேருந்து நிலையம்,  பண்ணாரி அம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அந்தியூர், பெருந்துறை, பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகேஸ்வரர் கோவில், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி சசி மோகன் உத்தரவின் பெயரில், டிஎஸ்பி-க்கள் மேற்பார்வையில் அந்தந்த காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.