வெடி சத்தம் கேட்டு கீழே விழுந்து படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு... திருச்செந்தூர் அருகே சோகம்!

 
dead

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வெடிச்சத்தம் கேட்டு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவபெருமாள் - செல்வக்குமாரி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் அஜய்குமார் (10). இவர் தோப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில், நேற்று அஜய்குமார், அதே பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடி உள்ளார். அப்போது, திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அஜய்குமார் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

nellai gh

இதனை அடுத்து, அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் அஜய்குமார் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்செந்தூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், மாணவர் இறப்புக்கு பள்ளி தலைமை ஆசிரியரே காரணம் என்றும், அவரை கைது செய்யவும் கோரி, உடலை வாங்க மறுத்து அஜய்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாணவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், அவரது தாய் செல்வகுமாரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அஜய்குமாரின் உறவினர்க்ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.