ஈரோட்டில் மே 8-ல் அனுமன் நதி பாதுகாப்பு யாத்திரை!

 
dd

ஈரோட்டில் ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை மற்றும் பாரதிய சன்யாசிகள் சங்கம் சார்பில் வரும் 8ஆம் தேதி அனுமதி பாதுகாப்பு யாத்திரை நடைபெற உள்ளதாக, சங்க நிர்வாகி சதானந்த சுவாமிகள் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த சுவாமிகள், குரங்கன் ஓடை எனப்படும் அனுமன் நதி, மொடக்குறிச்சி தொகுதியில் தேவனாம்பாளையம் பகுதியில் இருந்து கொடுமுடி வெங்கம்பூர் வரை சுமார் 35 கிலோ மீட்டர் சென்று காவிரியில் கலப்பதாகவும், தற்போது அந்த நதியில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பும், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால், அந்த நதியை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வரும் 8ஆம் தேதி விழிப்புணர்வு யாத்திரை நடைபெறுவதாக தெரிவித்தார்.

dd

யாத்திரையின்போது நதியை தூய்மை படுத்துவும், கரைகளில் பனை விதைகள், பழ மரச்செடிகளை நட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய சதானந்த சுவாமிகள், தமிழகத்தில் 75-க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளதாகவும், இவற்றில் பல ஆறுகள் தொழிற்சாலை மாசு, ஆக்கிரமிப்பு போன்றவைகளால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த 2011 முதல் காவிரி நீரை பாதுகாக்க குடகில் இருந்து பூம்புகார் வரை ஆண்டுதோறும் விழிப்புணர்வு யாத்திரை நடைபெறுவதாக கூறிய சதானந்த சுவாமிகள், காவிரி நதியை பாதுகாக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டு முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் வழங்கப்பட்டதாகவும், திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறினார்.

மேலும், மத்திய அரசு காவிரி நதியை பாதுகாக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், நதிகள்,  நீர்நிலைகளை பாதுகாப்பது பொதுமக்களின் கடமை என்றும், இதனை வலியுறுத்தியே யாத்திரை நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான நீரையும், காற்றையும் நாம் விட்டுச்செல்ல வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை மற்றும் சங்க நிர்வாகிகள் காந்தி, வேல்முருகன், கணேசன், சண்முகசுந்தரம், செந்தில் பாலசுப்ரமணியம் உடனிருந்தனர்.