வேலூர் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
vellore

வேலூர் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஓசூரை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் உட்கோட்ட டிஎஸ்பி திருநாவுக்கரசு, பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார், கொல்லமங்களம் பகுதியில் பெங்களுரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, லாரியின் உள்ளே இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

vellore

 இதனை அடுத்து, லாரியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தியது தொடர்பாக ஓசூரை சேர்ந்த விவேகானந்தன்(36), அரவிந்த்(26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் குட்கா பொருட்களை சென்னைக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.