மண்ணச்சநல்லூர் அருகே காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

 
trichy

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காரில் கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெரம்பலூர் சாலையில் நேற்று துறையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றபோது, ஒட்டுநர் நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை துரத்திச்சென்றனர். போலீசார் பின் தொடர்வதை கண்டு காரில் இருந்த நபர்கள் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, தப்பியோடினர். இதனை அடுத்து, போலீசார் அந்த காரில் சோதனையிட்டனர். அப்போது, காரில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது.

manachanallur

இதனை அடுத்து, சுமார் 57 மூட்டைகளில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த துறையூர் போலீசார், அதனை மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு குட்கா கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில் பெங்களுருவில் இருந்து விற்பனைக்காக குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, தப்பியோடிய கார் ஒட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.