கூடலூர் அருகே லாரியில் கடத்திய ரூ.40 லட்சம் குட்கா பறிமுதல் - ஓட்டுநர் கைது!

 
gutka

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி சோதனைச்சாவடி வழியாக தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு இடையேயான வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு கர்நாடகாவில் இருந்து தமிழக பதிவெண் கொண்ட லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்திவரப்படுவதாக கூடலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தொரப்பள்ளி சோதனைச் சாவடியில் கூடலூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பிஸ்கட் ஏற்றி வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர்.

gutka

அப்போது, பிஸ்கட்டுகளுக்கு மத்தியில் ஏராளமான குட்காவை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, லாரியில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா கடத்தல் தொடர்பாக லாரி ஓட்டுநர் கேரள மாநிலத்தை சேர்ந்த சுதிர் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் குட்கா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.