வாழப்பாடி அருகே வீட்டில் பதுக்கிவைத்த ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!

 
gutka

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விற்பனைக்காக வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கிவைத்த நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் ரூ.1.06 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திவந்து, விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி ஸ்வேதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் புதுக்காலனி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, வேனில் மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

arrested

இது தொடர்பாக வேன் ஓட்டுநர் வாழப்பாடியை சேர்ந்த சிவபாலன்(32) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் வெளிமாநிலங்களில் குட்காவை கடத்திவந்து வாழப்பாடி பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 705 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சிவபாலனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.1.06 லட்சம் ரொக்கப்பணம்  பறிமுதல் செய்யப்பட்டது.