தூத்துக்குடியில் காரில் கடத்திய ரூ.1.72 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - 4 பேர் கைது!

 
tuti

தூத்துக்குடி நகரில் காரில் கடத்தி வந்த ரூ.1.72 லட்சம் மதிப்பிலான 253 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த ஐ.ஜி., தனிப்படை போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். 

தூத்துக்குடி நகரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, மத்திய மண்டல ஐ.ஜி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியில் ஐ.ஜி தனிப்படை போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

tuticorin

அப்போது, காரில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து, காரில் 22 மூட்டைகளில் இருந்த 253 கிலோ குட்கா புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு ரூ.1.72 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக காரில் இருந்த தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தை சேர்ந்த பெரியசாமி(22), கே.வி.கே. நகரை சேர்ந்த ராஜ்குமார்(42), கிழக்கு போல்பேட்டை பகுதியை சேர்ந்த முத்துராஜ்(49) மற்றும்  ஏரல் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான குட்கா மற்றும் 4 பேரையும் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.