தூத்துக்குடி அருகே குட்கா கடத்திய இளைஞர் கைது... ரூ.1.18 லட்சம் குட்கா, கார் பறிமுதல்!

 
tuti

தூத்துக்குடி அருகே காரில் குட்கா கடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.1.18 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார், புதுக்கோட்டையில் இருந்து கூட்டாம்புளி செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்கள் கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

arrest

இதனை அடுத்து, காரில் இருந்த சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான 18,734 குட்கா பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவை கடத்தியது தொடர்பாக புதுக்கோட்டை குலையன்கரிசலை சேர்ந்த ரமேஷ்(30) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.