நெல்லை அருகே கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்... ஓட்டுநர் கைது, ரூ.12 லட்சம் குட்கா பறிமுதல்!
நெல்லை அருகே கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஓட்டுநரை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மினி கண்டெய்னர் லாரி மூலம் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் வீரவநல்லூர் அடுத்த காருகுறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி கண்டெயன் லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, கண்டெய்னரில் பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில், சந்தேகமடைந்த போலீசார் ஓட்டுநனரிம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கண்டெய்னரின் உள்ளே ரகசிய அறை அமைத்து குட்காவை கடத்திச்சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, ரகசிய அறையில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 574 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கரூர் மாவட்டம் சமுத்திரத்தை சேர்ந்த சிவகுமாரை கைது செய்த போலீசார், அவரை சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


