மணப்பாறை அருகே குட்கா பதுக்கிய மளிகைக்கடை உரிமையாளர் கைது... ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

 
gutka

மணப்பாறை அருகே வளநாடு பகுதியில் குட்காவை பதுக்கிவைத்து விற்பனை செய்த மளிகைக்கடை உரிமையாளரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வளநாடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்பி சுஜித் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், எஸ்பி தனிப்படை போலீசார் வளநாடு பகுதியில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வளநாடு கூட்டுறவு சங்கம் அருகே உள்ள மளிகைக்கடை உரிமையாளர் பாலன் என்பவரது வீட்டில்  ஏராளமான குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

valanadu

இதனை தொடர்ந்து, மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 43 மூட்டைகளில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக மளிகைக்கடை உரிமையாளர் பாலனை கைது செய்த போலீசார், அவரிடம் குட்கா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்றும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது வங்கிக் கணக்கை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.