கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி பெண் உயிரிழப்பு... அந்தியூர் அருகே சோகம்!

 
dead body

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி இளம்பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகள் கோகுலப்பிரியா (25). பொறியியல் பட்டதாரி. இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று கோகுலபிரியா தனது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை ஆன் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் அவர் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த கோகுலபிரியாவை, சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.

anthiyur

இது குறித்து அந்த பகுதி மக்கள்அளித்த தகவலின் பேரில், அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோகுலப்பிரியா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து, வெள்ளிதிருப்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை ராமசாமி புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.