"சொத்து வரி உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்" - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்!

 
vasan

தமிழக அரசு சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மேற்கு மண்டலக் கிளை சார்பில், சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி தலைவரும், எம்.பியுமான ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். இதில் ஏராளாமான  தொண்டர்கள் கலந்து கொண்டு சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், திமுக தனது தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மத்திய அரசு மீது பழியைசுமத்தி, சொத்து வரியை 25-லிருந்து 150 சதவீதம் வரை உயர்த்திவிட்டதாகவும், ஏற்கனவே பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை - எளிய மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே சொத்துவரி உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். சொத்து உயர்வுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள்  வாய்திறக்கவில்லை என குற்றம்சாட்டிய வாசன், இதுவரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடியும் என்றும் தெரிவித்தார். 

dd

மேலும், அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக கூறிய வாசன், திமுக அறிவித்த குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் வழங்குதல் மற்றும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய வாசன், தற்போது நூல்விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கொங்கு மண்டலத்தில் ஜவுளித்தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும்,  இதை தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், மின் தடை கடுமையாக உள்ளதால் மாணவ-மாணவிகள் படிக்க சிரமப்படுவதாக கூறிய வாசன்,  தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரித்து, மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.

தமிழகத்தில் சட்டம்- ஓழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டிய வாசன், பள்ளிகள், கல்லூரி மாணவ - மணவிகள்  போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்கவும், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கு மாறாக புதிதாக கடைகள் உருவாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில நிர்வாகிகள் சந்திரசேகர், கௌதமன், மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்