கோவையில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என புகார்.. உடற்கல்வி ஆசிரியர் கைது!

 
cbe

கோவை சுகுணாபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும், புகாருக்குள்ளான ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிரபாகரன் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும், அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். எனினும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இன்று சுகுணாபுரம் அரசுப்பள்ளி முன்பு திரண்டு, புகாருக்குள்ளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாநகர காவல் உதவி ஆணையர் சிலம்பரசன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

police

அதில் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரது அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், தலைமறைவாக இருந்த பிரபாகரனையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க கோட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டு உள்ளார்.