சூலூர் அருகே மின்சாரம் தாக்கி அரசுப்பள்ளி மாணவர் பலி!

 
dead body

கோவை மாவட்டம் சூலூர் அருகே மின்சாரம் தாக்கி அரசுப்பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவர் கோவை மாவட்டம் சூலூர் அடுத்த எஸ்.அய்யாபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் வெற்றிவேல்(16). இவர் செஞ்சேரிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இந்த நிலையில் குமார், கடந்த வாரம் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு குடி புகுந்துள்ளார். தற்போது அவரது வீட்டிற்கு யுபிஎஸ் மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

coimbatore

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறுவன்  வெற்றிவேல் யுபிஎஸ்ஐ ஆன் செய்ய முயன்றுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வெற்றிவேலை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தந்தை குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதிய வீட்டிற்கு சென்ற ஒரு வாரத்தில் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.