''கச்சத்தீவை மீட்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது'' - பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்!

 
cp radha

கச்சத்தீவை மீட்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளதாகவும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை என்றும் பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட பாஜகவில், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கட்சியினரிடையே உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டும் தமிழக நிதியமைச்சர், நிலக்கரி, மின்சாரம் போன்றவைக்கு மாநில அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறினார்.  ஜிஎஸ்டி-யில் அனைத்து மாநில அரசுக்கும் தர வேண்டியதை மத்திய அரசு முறையாக வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

cp radha

பிரதமர் சமஸ்கிருதத்தை காட்டிலும், தமிழ்மொழி உயர்வானது என கூறியுள்ளதாகவும், அதனால் இந்தி, சமஸ்கிருதத்தை மத்திய அரசு புகுத்துவதாக குற்றம்சாட்டுவது தவறு என கூறிய ராதாகிருஷ்ணன், ராகுல்காந்தி அரசியல் முதிர்ச்சி அற்றவர் என்பதால், பிரதமர் மீது குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார். மேலும்,வல்லரசு நாடுகளே இந்தியாவை உயர்வாகக் கருதுவதாகவும், மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருமாறிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை மீட்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளதாகவும், அதுவே பாஜகவின் கொள்கை என கூறிய ராதாகிருஷ்ணன், விரைவில் இதுகுறித்த முன்னேற்றத்தை மக்கள் காண்பார்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், பஞ்சு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளதால், இன்னும் 45 நாட்களுக்குள் பஞ்சு விலை குறைந்து, நூல் விலையும் குறையும் என்றும், அப்போது ஜவுளித் தொழில் நெருக்கடி தீரும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு தொடர்ந்து குறை கூறிக்கொண்டிருக்காமல் தமிழகத்தின் தொழில், வேளாண்மை வளர்ச்சிக்கு திமுக அரசு பாடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, முன்னாள் எம்பி சௌந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம்,  மாவட்ட தலைவர் செந்தில்குமார் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.