பாலக்கோடு அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து; பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் படுகாயம்!

 
dd

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் படுகாயமடைந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஓன்று தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டிச்சென்றார். நேற்று மதியம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சூடப்பட்டி என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்ததது. அப்போது, அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் சாலை வளைவில் எதிரே லாரி வந்ததால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்த பிரேக் பிடித்துள்ளார். அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. 

dd

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 40 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார், அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு மற்றும் தருமபுரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக பாலக்கோடு - தருமபுரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.