நெஞ்சுவலியுடன் பேருந்தை இயக்கிய அரசுப்பேருந்து ஓட்டுநர்... பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்!

 
sathankulam

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நெஞ்சுவலியுடன் பேருந்துடன் ஓட்டிவந்த அரசுப்பேருந்து ஒட்டுநர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி போக்குவரத்து பணிமனையை சேர்ந்தவர் ஓட்டுநர் முருகேச பாண்டியன் (59). இவர் சம்பவத்தன்று நெல்லையில் இருந்து அரசுப் பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியில் சென்றபோது, ஓட்டுநர் முருகேச பாண்டியனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.

dead

எனினும் பேருந்தில் பயணிக்கும் 50-க்கும் மேற்பட்ட பயணிகளின் நலன் கருதி, பேருந்தை சாத்தான் குளம் பேருந்து நிலையத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, பேருந்து நடத்துநர் மற்றும் சக ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேச பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். வழியிலேயே நெஞ்சுவலி ஏற்பட்டபோதும் பயணிகளின் நலனை கருதி அவர்களை பத்திரமாக பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு உயிரிழந்த ஓட்டுநர் முருகேச பாண்டியனின் செயல் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.