எரிந்த நிலையில் சடலமாக கிடந்த அரசுப்பேருந்து ஒட்டுநர்... திருப்பத்தூர் அருகே பரபரப்பு!

 
dead

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே அரசுப் பேருந்து ஒட்டுநர் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கொங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ராஜ்குமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற ராஜ்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

tirupattur

இந்த நிலையில், அன்று மாலை கொங்கியூர் அடுத்த நெடுமியூர் ஏரிப் பகுதியில்  உள்ள சுடுகாட்டில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது கொலை செய்யப்பட்டு உடலை எரிக்க முயற்சித்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.