ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து பணம், செல்போன் திருட்டு... திருப்பூரில் வடமாநில கொள்ளை கும்பல் கைது!

 
tiruppur

திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து பணம், செல்போனை திருடிய வடமாநில கும்பலை சேர்ந்த 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில், வடமாநில பயணிகளை குறிவைத்து  வடமாநில கும்பல் ஒன்று, அவர்களிடம் நட்பாக பழகி மயக்க மருந்து தடவிய கிரீம் பிஸ்கெட்டுகள், டீ, குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிட கொடுத்து, அவர்கள் மயங்கிய உடன் செல்போன், பணம் மற்றும் அவர்களது பொருட்களை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக ரயில்வே காவல் ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில்,  கோவை ரயில்வே காவல் டிஎஸ்பி  யாஸ்மின், காவல் ஆய்வாளர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். 

மேலும், கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகள் மற்றும்  ரயில் நிலையம் அருகில் உள்ள பேக்கரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். மேலும், கொள்ளை சம்பவத்தின்போது அந்த பகுதியில் இருந்த செல்போன் எண்களை ரயில்வே போலீசார், சைபர் செல் உதவியுடன் எடுத்து, மயக்க மருந்து கொடுத்து பொருட்களை கொள்ளையடித்தவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

tiruppur

இந்த நிலையில், திருப்பூர் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகே மயக்க பிஸ்கெட்  கொடுத்து திருடும் சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த சஹால் ஆரரியா என்கிற சல்மான்(27), மன்வார் ஆலம்(25), முகமது ஆசாத்(32), அப்துல்லா (31), மக்மூத் ஆலம் (31) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கைதானவர்கள் அனைவரும் பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல் பாளையத்தில் உள்ள சூர்யா காலனியில் தங்கி, அங்குள்ள பனியன் நிறவனங்களில் வேலை செய்து வருவது தெரியவந்தது.

திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் காதர் பேட்டை பகுதிகளுக்கு வரும் வடமாநில பயணிகளை குறிவைத்து, பிஸ்கட்டில் மயக்க மருந்து தடவி கொடுத்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், கொள்ளையடிக்கும் பணம் மட்டும் பொருட்களை கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது தொடர்ந்து, 5 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 50 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணம், மயக்க மருந்து கலந்த பிஸ்கெட்டுகள், மயக்க மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.