திருப்பூரில் அரசுப்பேருந்து சக்கரம் ஏறியதில் பெண் பலி... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
tirupur

திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் மீது அரசுப்பேருந்து சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் நகர் மிஷின் வீதியை சேர்ந்தவர் முகமது இஷாக். இவரது மனைவி ரபியதுல் பகிரியா. நேற்று காலை கணவன் - மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் திருப்பூர் குமரன் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்த அரசுப்பேருந்து , எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற முகமது இஷாக்கின் வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது, ரபியதுல் பகிரியாவின் மீது பேருந்தின் பின்புற சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முகமது இஷாக் காயங்களுடன் உயிர் தப்பினார். 

tirupur Gh

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார், காயமடைந்த முகமது இஷாக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான ரபியதுல் பகிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் முத்துமாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.