தாய் கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை... திருச்சி அருகே சோகம்!

 
suicide

திருச்சி அருகே வீட்டு வேலை செய்வதில்லை என தாய் கண்டித்ததால் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா கரியமாணிக்கம் சோழங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ரமணி கலா. இவர்களது மகள் திவ்யதர்ஷினி(15). முருகேசன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் ரமணி கலா, கட்டிட வேலைக்கு சென்று மகள் திவ்யதர்ஷினியை வளர்த்து வந்தார். 9ஆம் வகுப்பு வரை படித்துள்ள திவ்யதர்ஷினி, அந்த பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

dead

இந்த நிலையில், திவ்ய தர்ஷினி வீட்டு வேலை மற்றும் சமையல் பணிகளை சரிவர செய்வதில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தாய், மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை ரமணி கலா கட்டிட வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த திவ்ய தர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே சிறுமி வேலைக்கு செல்லாமல் வீட்டிற்குள்ளே இருப்பது குறித்து அருகில் இருந்தவர்கள், அவரது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில், வீட்டிற்கு வந்த ரமணி கலா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச்சென்று பார்த்தபோது திவ்யதர்ஷினி தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.  தகவலின் பேரில் வாத்தலை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.