கோவை மாநகரில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி... பாதுகாப்பிற்காக 400 சிறப்பு காவல் படையினர் குவிப்பு!

 
cbe bombing

கோவை மாநகரில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 4 கம்பெனி போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை சித்தாபுத்தூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அதனை தொடர்ந்து, டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச்சென்றனர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை கோவை 100 அடி சாலையில் உள்ள பாஜக ரத்தினபுரி மண்டல தலைவர் மோகன் என்பவருக்கு சொந்தமான கடையில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. மேலும், குனியமுத்தூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்  தியாகுவின் காரை மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

cbe bjp

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 4 கம்பெனியை சேர்ந்த 400 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள ஆத்துப்பாலம், டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 

cbe bombing

மேலும், பாஜக கட்சி அலுவலகம், இந்து முன்னணி அலுவலகம், பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.