கோவையில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வடமாநில தொழிலாளி படுகாயம்!

 
cbe blast

கோவை தியாகி குமரன் சாலை வீதியில் உள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் வடமாநில தொழிலாளி படுகாயமடைந்தார்.

கோவை காந்தி பார்க் தியாகி குமரன் வீதியில் ஏராளமான தங்க நகை பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டறைகளில் வடமாநிலங்களை ஏராளமான தொழிலாளர்கள், தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பிஜாய் என்பவர் தியாகி குமரன் வீதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கி அங்குள்ள நகை பட்டறையில் பணிபுரிந்து வந்தார். இன்று காலை 9.30 மணியளவில் பிஜாய் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் வீட்டின் மேற்கூரை உடைத்து சேதமடைந்தது. இந்த விபத்தில் பிஜாய் பலத்த காயமடைந்தார்.

cbe blast

பயங்கர வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று காயமடைந்த பிஜாயை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிஜாய் சமையல் எரிவாயு சிலிண்டரை சரியாக மூடாததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.