கடன் தொல்லையால் ஜவுளிக்கடை உரிமையாளர் தற்கொலை... தக்கலை அருகே சோகம்!

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் தொல்லையால் ஜவுளிக்கடை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவர் பள்ளியாடி சந்திப்பு பகுதியில் ஜவுளிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சோபா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில், பிரசாத் தொழில் தொடர்பாக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் பணத்தை சரிவர செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாத் தூங்க சென்றுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சோபா, அறைக்குள் சென்று பார்த்துள்ளார். 

thakalay

அப்போது, பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த சுபா கதறி அழுதார். தகவலின் பேரில் தக்கலை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரசாத் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.