முசிறி அருகே சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்... செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது!

 
musiri

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த ஆண்டு சித்திரை மாதம் இவரை முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த உறவினரான ரெங்கநாதன் (21) என்பவர் இருசக்கர வாகனத்தில் காவிரி கரையில் உள்ள தைலமரக்காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.  தொடர்ந்து ரெங்கநாதன்,  தனது நண்பர்கள் மணி என்ற மணிகண்டன், தர்மா என்கிற கணேஷ் உள்ளிட்ட 4 பேரை வரவழைத்து, 5 பேரும் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

rape

மேலும், அதனை செல்போனில் வீடியோ எடுத்த அவர்கள், அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி மீண்டும் சிறுமியை வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து 3 முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்த பெற்றோர் அவருக்கு கடந்த மே மாதம் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர், போலீசில் புகார் அளித்து, சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். சிறுமி அங்கு தங்கி படித்து வருகிறார்.

arrest

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ காட்சி வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இது தொடர்பாக  முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரெங்கநாதன்,  மணிகண்டன் மற்றும் கணேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மற்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.