"மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்" - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்!

 
slm

சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைத்திட வேண்டும் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை ஓட்டி, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூணான்டியூர் மற்றும் திம்மம்பட்டி காவிரி கரையோர பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளளவினை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரிநீராக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு  வருகிறது. மேலும், அணைக்கு தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து உள்ளது. எனவே காவிரி கரையோர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு , சிலைகளை கரைக்க வருகை தருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விநயாகர் சிலைகளை கரைத்திட வேண்டும்.

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. இத்தகைய சூழலில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வருபவர்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். குறிப்பாக சிறுவர்களை நீர்நிலைகளுக்குள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கக்கூடாது. காவல்துறை , வருவாய் துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நீர் நிலைகளிலும் முன்னெச்சரிக்கை பலகைகள்  வைக்கப்பட்டு உள்ளன.

slm

குறிப்பாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேச்சேரி, ஓமலுர், வெள்ளாறு, சேலம் மாநகர், கூணான்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கூணான்டியூர் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், திப்பம்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், குஞ்சாண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது விநாயகர் சிலைகளை திப்பம்பட்டி காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் கரைப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் முத்துராஜா உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் உடனிருந்தனர்.