இலவசமாக பெட்ரோல் போட மறுத்ததால் ஆத்திரம்... பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்!

 
tirupattur

திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்திற்கு இலவசமாக பெட்ரோல் போட மறுத்ததால், பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் திருப்பத்தூர் அப்பாய் தெருவை சேர்ந்தவர் ஷாகீர்(26) மற்றும் சிவகுமார் ஆகியோர் ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், வாகனத்திற்கு இலவசமாக பெட்ரோல் நிரம்ப்பும் படி கூறியுள்ளனர்.

arrest

அதற்கு மறுப்பு தெரிவித்த ஷாகிர் மற்றும் சிவகுமாரை, அவர்கள் சரமாரியாக தாக்கி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ஷாகிர் மற்றும் சிவகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஷாகிர் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட  திருப்பத்தூர் கவுதமபேட்டையை  சேர்ந்த சபரிநாதன்(27), டி.எம்.சி காலனியை சேர்ந்த வினோத் குமார்(24) மற்றும் அப்பாய் தெருவை சேர்ந்த தவுபிக் (24) ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே, பெட்ரோல் பங்க் ஊழியர்களை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.