மகள்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் ஆத்திரம்... 2-வது கணவரை வெட்டிக்கொன்ற மனைவி!

 
trichy

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் 2-வது கணவரை அரிவாளால் வெட்டிக்கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரபு(30). இவர் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான செங்கல்சூளையில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே சூளையில் பணிபுரிந்து கணவரை இழந்த பண்ருட்டியை சேர்ந்த ரேகா (30) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரேகாவுக்கு முதல் கணவர் மூலம் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனை தொடர்ந்து, பிரபு, ரேகா ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக கணவன் - மனைவியாக சூளையில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் பிரபு திடீரென மாயமாகினார். 

dead

இது குறித்து அவரது தந்தை ஆறுமுகம், முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகனுடன் தொடர்பில் இருந்த ரேகா மற்றும் அவரது பிள்ளைகளிடம் விசாரிக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன் பேரில், முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேகா மற்றும் அவரது பிள்ளைகளை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மகள்களிடம் தவறாக நடந்து கொண்டதால் பிரபுவை கொலை செய்ததாக ரேகா ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், 2-வது கணவரான பிரபு, ரேகாவின் 16 வயது மற்றும் 14 வயது மகள்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதனை ரேகா நேரில் பார்த்த நிலையில், கணவர் பிரபுவை கண்டித்துள்ளார். எனினும் அவர் கேட்கவில்லை.

 இதனால் ஆத்திரமடைந்த ரேகா, சம்பவத்தன்று பிரபுவின் தலையில் அரிவாளால் வெட்டியும், அவரது தலையில் தடியால் தாக்கியும் கொலை செய்தார். பின்னர் தான் வசிக்கும் கூரை கொட்டகையின் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் உடலை தள்ளிவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட நிலையில்,  அந்த சடலம் அடையாளம் தெரியாததால் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அது பிரபு என தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார், ரேகாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.