சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்... மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்!

 
mayiladuthurai

மயிலாடுதுறையில் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அக்பர் காலனி பகுதியை சேர்ந்தவர் அருள் (49). இவர் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (45). இவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  ரேவதி  அங்குள்ள ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அருள் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரேவதி கடந்த ஒரு வருடமாக கணவனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

mayiladuthurai

இந்த நிலையில், நேற்று அவர்களது திருமண நாளையொட்டி, அருள் ரேவதியின் வீட்டிற்கு சென்று சேர்ந்து வாழ வரும்படி அழைத்து உள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரேவதி, தனது உடைமைகளை எடுக்க வேண்டும் என கூறி கணவர் அருளுடன் சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அருள் கத்தியால் ரேவதியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த ரேவதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மயிலாடுதுறை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கணவர் அருளை கைது செய்தனர். சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கணவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.