"சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு மண்டபம் ரூ.2.60 கோடியில் கட்டப்படும்" - அமைச்சர் முத்துசாமி தகவல்!

 
muthusamy

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு மண்டபம் ரூ. 2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் என  வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கொங்கு மண்டல சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் தளபதியாக பணியாற்றிய மாவீரன் பொல்லானின் 254 ஆவது பிறந்தநாள் அரசு விழாவாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சமுதாயக்கூடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, பொல்லான் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

muthusamy

பின்னர் முத்துசாமி கூறியதாவது- பொல்லான் நினைவரங்கம் ஜெயராமபுரம் பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் இன்னும் ஓராண்டுக்குள் கட்டப்படும். இதற்காக 47 சென்ட் நிலம் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், நிலம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்த நிகழ்ச்சி நினைவு அரங்கில் நடத்தப்படும். ஒரு சில மாதங்கள் கால தாமதமானால், அதற்கு அடுத்த ஆண்டு அரசு விழா அங்கு நடைபெறும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்பி கணேச மூர்த்தி, மாநகரட்சி மேயர் நாகரெத்தினம், மாவட்ட எஸ்பி சசிமோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.