விருதுநகரில் 18 - 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது!

 
vaccine camp

விருதுநகர் மாவட்டத்தில் 18 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு  பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் ஜுலை 18 முதல் 75 நாட்களுக்கு இலவசமாக போடப்படுவதாக ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் 18 - 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள்  கடந்த ஜுலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக போடப்படுகின்றன.  தற்போது வரை 2 தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. இந்த நிலையில், ஜுலை 15, 2022 முதல் 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக போடப்படுகின்றன.

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது 2 டோஸ் எடுத்துக்கொண்ட பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்கவைத்துக்கொள்ள செலுத்தப்படுகிறது. 2-வது டோஸ் செலுத்திய பின்னர் 6 மாத காலத்தில் பூஸ்டர் டோஸ்  செலுத்திக்கொள்ளலாம். அதன்படி ஜுலை 15 முதல் 75 நாட்களுக்கு அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

virudhunagar

எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும், விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்கும் பொருட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொதுஇடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றுதல் வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் வேண்டும். சோப் மற்றும் தண்ணீர், சானிடைசரை(கிருமி நாசினி) பயன்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார்  அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களின் நுழைவாயிலில் நுழைபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.

கிருமி நாசினி வைக்க வேண்டும். காய்ச்சல், இருமல் இருந்தால் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். மேலும், மருத்துவரின் அறிவுரையின் பேரில் (பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாமல்)   தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.