ஈரோட்டில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை... 50 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

 
food safty

ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் நேற்று உணபு பாதுகாப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள், காளான்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் செல்வம், அருண்குமார், ஏட்டிகன் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று ஈரோடு மாநகர பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்கள், ஓட்டல்கள்,  டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குமலன்குட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அங்கு நேற்று முன்தினம் சமைத்து வைக்கப்பட்டிருந்த இறைச்சி கறிகள், கிரில் சிக்கன், புரோட்டா ஆகியவை நேற்று மீண்டும் பயன்படுத்துவதற்காக பிரீசரில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

food safty

அங்கிருந்து, 3 கிலோ சிக்கன், 20 புரோட்டாக்கள், காலாவதியான 3 காளான் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அத்துடன், சிக்கன் குழம்பும் சோதனைக்காக எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இதேபோல், ஈரோடு பழையபாளையம் பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் சோதனையிட்டபோது, அங்கு காலாவதியான காளான் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே பகுதியில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 20 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று நடந்த உணவுப்பாதுகாப்பு துறையினர் சோதனையில் மொத்தமாக 50 கிலோ பழைய இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த சோதனை இம்மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.