மாயாற்றில் வெள்ளப்பெருக்கு; மசினகுடி - தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு!

 
nilgiris

நீலகிரி மாவட்டம் மசினகுடி - தெப்பாக்காடு இடையிலான தரைப்பாலத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பழங்குடியின கிராமங்களுக் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஆங்காங்கே மண் சரிவுகளும், சாலையில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை,குந்தா, கூடலூா், பந்தலூா் ஆகிய 4 தாலுகாக்களில் 2 -வது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

nilgiris

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மசினகுடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் மசினக்குடி, மாயார், சிங்காரா உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களுக்கு போக்குரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்த பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனிடையே, தெப்பாக்காடு பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வேலை மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக மசினக்குடி செல்லும் நிலையில் தரைப்பாலம் மூழ்கியதால் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அடுத்து, அதிகாரிகள் உதவியுடன் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பழங்குடியின மக்கள் மாயாற்றை கடந்து அக்கரையில் உள்ள மசினகுடி பகுதிக்கு சென்று வருகின்றனர். மேலும் முதுமலை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கூடலூா் வழியாக திருப்பி விடப்பட்டு வருகின்றன..